×

வனக்கோட்டத்தில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு

*15 புதிய இனங்கள் கண்டுபிடிப்பு; வனத்துறை அதிகாரிகள் தகவல்

ஈரோடு : ஈரோடு வனக்கோட்டத்தில் 24,000க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளது எனவும், 15 புதிய இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில், பறவைகள் வாழிடமாக ஈர நிலங்கள் பிரிவில் மரப்பம்பாளையம் ஏரி, ஓடத்துறை ஏரி, ஆப்பக்கூடல் ஏரி, மூனாம்பள்ளி ஏரி, குள்ளம்பாளையம் குளம், வேட்டைக்காரன் கோயில் ஏரி, செட்டிபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, எலத்தூர் குளம் உள்ளிட்ட 16 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இதில், செட்டிபாளையம் ஏரி பறவைகளின் சிறந்த பன்முக தன்மை கொண்டதாகவும், வேம்பத்தி ஏரி வலசை வாத்துகள் மற்றும் பறவைகளின் மிகப் பெரிய பன்முகத்தன்மை கொண்ட வாழிடமாக உள்ளது.

எலத்தூர் குளமானது ஈரோடு மாவட்டத்தின் பரந்துபட்ட பல்வேறு பறவைகளின் பன்முகத்தன்மை கொண்ட ஈரநிலப் பகுதியாக உள்ளது. மலைகள் பிரிவில் பொலவக்காளிபாளையம் குன்று, பவளமலை, பச்சைமலை குன்றுகள் மற்றும் நாகமலை குன்றுகள் என 4 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இதில், மலைகள் பிரிவில், ஈரோடு மாவட்டத்திலேயே நாகமலைக் குன்று மட்டுமே தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு ஏற்ற நல்லதொரு உயிர்ச்சூழல் மற்றும் பன்முக தன்மை கொண்ட இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனூர் ஆகிய 3 வனக்கோட்டங்களில், ஈரோடு வனக்கோட்டத்தில் ஈரோடு, அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய 5 வனச்சரகங்கள் உள்ளன. ஈரோடு வனக்கோட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட 21 ஏரி, குளங்களில் இந்த ஆண்டுக்கான பறவைகளை கணெக்கெடுப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இதில், வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள், நிபுணர்கள் என 140 பேர் பங்கேற்றனர்.

இந்த கணக்கெடுப்பில், கண்ணில் தெரியும் பறவைகள், அவற்றின் இனங்கள், சத்தம், அவை மொத்தமாக உள்ள பகுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கனகபுரம் ஏரி உள்ளிட்ட இடங்களில் நிரந்தரமாக காணப்படும் பாம்புதாரா, சிறிய, பெரிய நீர் காகங்கள் உள்ளிட்ட பறவைகள், பிற இடங்களில் இருந்து வந்து செல்லும் நெடுங்கால் உள்ளான், ஊசிவால் வாத்து, மஞ்சள் வாலாட்டி, மண்கொத்தி (மற்றொரு பெயர் ‘உள்ளான்’), மாங்குயில், சாம்பல் நாரைகள் போன்ற உள்ளூர் பறவைகளும், நீலமுக பூங்குயில், சிறிய பட்டாணி (அல்லது) உப்புக்கொத்தி போன்ற வலசை பறவைகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகளும் இக்கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன.

ஈரோடு வனக்கோட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய 6 வட்டங்களில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ஈரோடு வன கோட்டத்தில் மட்டும் மொத்தம் 24,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 206 விதமான பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 15 வகையான பறவை இனங்கள் புதியவை என்பதும் தெரியவந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வனக்கோட்டத்தில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vanakottam ,Forest Department ,Erode Forest Department ,Erode district ,Dinakaran ,
× RELATED காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்